வேலைவாய்ப்பு, விவசாய நிலத்திற்கு நீர் பாசனம் என்று ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிவிட்டதாக கோவை மாநகராட்சி மீது ஆதிவாசி இன மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: வேலைவாய்ப்பு, விவசாய நிலத்திற்கு நீர் பாசனம் என்று ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிவிட்டதாக கோவை மாநகராட்சி மீது ஆதிவாசி இன மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை மாநகர மக்களின் தாகம் தீர்க்க மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்தும் சிறுவாணியில் இருந்தும் நாள் தோறும் 120 எம்.எல்.டி தண்ணீர் ராட்சத மின்மோட்டார்கள் மூலம் எடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மலைகளை குடைந்து வெள்ளியங்காடு பகுதியில் நீர் ஏற்று நிலையம் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் கோவை மாநகரம் மற்றும் வழியோர மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவ்வப்போது சிறுவாணி அணையில் தண்ணீர் குறையும் போது கோவையில் ஏற்படும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க கடந்த 2009-ம் ஆண்டு பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நெல்லிமரத்தூர்
அதற்காக பில்லூர் அருகே உள்ள நெல்லிமரத்தூர் கிராமத்தில் வசித்து வந்த மலைவாழ் மக்களைச் சேர்ந்த 16 ஆதி வாசி குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதுடன் அவர்களின் வாழ்வாதாரமாக இருந்துவந்த 6 ஏக்கர் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. அதற்கு இழப்பீடாக உரிய நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றவாறு மாநகராட்சி சார்பில் அரசு வேலை வாய்ப்பும் அளிப்பதுடன் மீதமுள்ள தரிசு நிலங்களுக்கு விவசாய பாசனத்திற்கு 24 மணி நேரமும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டும் என ஆசை வாக்குறுதிகளை அள்ளி வீசி நிலங்களை கையகப்படுத்திய மாநகராட்சி நிர்வாகம் கடந்த எட்டு ஆண்டுகளாக தங்களை ஏமாற்றி வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட ஆதிவாசி இன மக்கள்.

மலைகளுக்கு நடுவே வசித்து வரும் இந்த மக்களுக்கு மானவாரி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மட்டுமே வேலைவாய்ப்பாக இருந்து வருகிறது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வருவாயாக இருந்த நிலையில் சொத்து என்று இருந்த விவசாய நிலத்தையும் குடிநீர் திட்டத்திற்காக கொடுத்துவிட்டு இன்று ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் நகர பகுதிக்கு வேலை வாய்ப்பினை தேடி அலையும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர் நெல்லிமரத்தூர் ஆதிவாசி மக்கள்.

"நிலஆர்ஜிதம் செய்யும் போது தங்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாகவும் விவசாய நீர்ப்பாசனம் செய்து தங்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வாழ்வாதரத்தை உயர்த்தித் தருவதாக வாக்குறுதி அளித்த அதிகாரிகள் இன்று ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாத நிலைக்கு ஆளாக்கி விட்டனர்" என்று வேதனை தெரிவிக்கின்றனர் அவர்கள்.
வாழ்வாதாரம்
எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த கிராமத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உருவாகி தங்களுக்கான வேலைவாய்ப்பினை பெற பல முறை மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்திய போதும் அதனை தட்டி கழிக்கும் அதிகாரிகள் காத்திருக்க சொல்வதாகவும் காத்திருந்து, காத்திருந்து எட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தங்கள் மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் கூறும் அப்பகுதி இளைஞர்கள் "வேலைவாய்ப்பிற்குச் சற்று தாமதம் ஆனாலும் பரவாயில்லை, விவசாயத்திற்கான நீர் பாசனத்தையாவது உடனடியாக வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியும் அதிகாரிகள் அதனைக் கூட வழங்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை இது குறித்து கோரிக்கை மனு அளித்தும் 'மலைவாழ் மக்கள் தானே' என அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் மலைவாழ் சங்கத்தினர்.
மேலும், பல லட்சம் மக்களின் தாகம் தீர்த்த மக்களுக்கு அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் விவசாய பாசன திட்டத்தை வழங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவறினால் எட்டு ஆண்டுகளாக ஆதிவாசி மக்களின் உரிமைகளை மறுக்கும் மாநகராட்சியைக் கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் விரைவில் மலைவாழ் மக்களை ஒருங்கிணைத்து முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.